கொடைக்கானலில், தேங்கி கிடக்கும் குப்பைகளால் மாசடைந்த நட்சத்திர ஏரி - தூய்மைப்படுத்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
கொடைக்கானலில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் மாசடைந்து வரும் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். உலக புகழ்பெற்ற கொடைக்கானலின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக நகரின் மைய பகுதியில் நட்சத்திர வடிவிலான ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பழனி நகருக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது வாடிக்கையான ஒன்று. அதிலும் நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சாலையில் ஏரியின் அழகினை ரசித்தபடி நடைபயிற்சி செய்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி முழுவதும் தற்போது நீர்த்தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் குடிமகன்கள் குடித்துவிட்டு ஏரியில் மதுபாட்டில்களை வீசுகின்றனர். ஏரியை சுற்றிலும் உள்ள விடுதி மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலக்கின்றன. இதுதவிர சுற்றுலா பயணிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் ஏரியில் வீசப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் ஏரி மேலும் மாசடைந்து வருகிறது. மேலும் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளால் ஏரி தண்ணீர், சாக்கடை கழிவுநீர் போன்று காட்சி தருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரியை தூய்மைப்படுத்த ரூ.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரையிலும் ஏரியை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வப்போது நகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்களால் ஏரியில் உள்ள கழிவுகள் மற்றும் மதுபாட்டில்கள் மட்டும் அகற்றப்படுகின்றன. ஆனால் மாசடைந்துள்ள நீரை தூய்மைப்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை வகுத்து தூய்மைப்படுத்துவதுடன், போர்க்கால அடிப் படையில் ஏரியில் படர்ந்துள்ள நீர்த்தாவரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story