ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 16 Dec 2020 9:47 PM IST (Updated: 16 Dec 2020 9:47 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதை வனப்பாதுகாவலர் ஆய்வு செய்தார்.

தளி,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.

இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. இந்த பணி வருகின்ற 21-ந்தேதி வரை நடக்கிறது.

மேலும் யானை லத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரிமந்தி, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது.

இறுதி நாளான 21-ந் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் கணக்கெடுப்புபணி நடைபெறும் போது வனத்துறையினருக்கு உதவியாக தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அவர்கள் பணியில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் அமராவதி வனச்சரகம் கல்லாபுரம் சுற்றில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் ஆய்வு செய்தார். அப்போது உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.

Next Story