விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நாளை நடக்கிறது
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை மாவட்ட விவசாயிகள் காணொலி காட்சி மூலம் கலெக்டரை சந்தித்து தங்களுடைய விவசாயம் சார்ந்த குறைகளை கூறி நடவடிக்கைளை பெற்று பயனடைய வேண்டும்.
இந்த காணொலி காட்சியில் கலந்து கொள்ள தங்கள் பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்குள்ள காணொலி அரங்கில் இருந்து கலெக்டரிடம் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த மனுக்களை மட்டும் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story