நெல்லை மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் - கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்
நெல்லை மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார். இதை நபார்டு வங்கி பிராந்திய மேலாளர் சலீமா மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
நபார்டு வங்கி வருடம்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வருகிறது. இதில் வளத்தின் அடிப்படையில் முன்னுரிமை துறைகளான விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டமைப்புக்கான பொது முதலீடுகள், சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்திகளுக்கான கடன் அளவிடப்படுகிறது.
நபார்டு வங்கி நெல்லை மாவட்டத்திற்கான வங்கி கடன் ரூ.6 ஆயிரத்து 248 கோடியே 9 லட்சம் என நிர்ணயித்துள்ளது. நபார்டு வங்கியின் 2021-2022-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நெல்லை மாவட்டத்திற்கு குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2 ஆயிரத்து 786 கோடியே 63 லட்சமும், வேளாண் தொழில் சார்ந்த விவசாய கட்டமைப்பு, உணவு மற்றும் பயிர் பதனிடும் தொழில்கள் காலகடனாக ரூ.1,600 கோடியே 56 லட்சம் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மதிப்பீடு ரூ.542 கோடியே 15 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி ஏற்றுமதி கடன் ரூ.49 கோடியே 50 லட்சமும், கல்விக்கடன் ரூ. 234 கோடியே 75 லட்சமும், வீட்டு கட்டுமான கடன் ரூ.256 கோடியே 32 லட்சமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சுய உதவிக்குழுக்களுக்குரூ.122 கோடியே 17 லட்சமும், கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கு கடனாக ரூ.656 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக வளம் இருப்பதால் அனைத்து வங்கிகளும் அதிக அளவில் விவசாயத்திற்கான குறுகிய கால கடன் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கிடவும், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story