கொரோனா நெருக்கடியிலும் கர்நாடகத்திற்கு அன்னிய நேரடி முதலீடு 42 சதவீதம் வந்தது முதல்-மந்திரி எடியூரப்பா மகிழ்ச்சி


கொரோனா நெருக்கடியிலும் கர்நாடகத்திற்கு அன்னிய நேரடி முதலீடு 42 சதவீதம் வந்தது முதல்-மந்திரி எடியூரப்பா மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Dec 2020 4:09 AM IST (Updated: 17 Dec 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நெருக்கடி சூழ்நிலையிலும் கர்நாடகத்திற்கு அன்னிய நேரடி முதலீடு 42 சதவீதம் வந்துள்ளது என்று கூறி முதல்-மந்திரி எடியூரப்பா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக தொழில் வர்த்தக சபையின் 103-வது பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழில் வர்த்தக சபையின் பங்கு முக்கியமானது. தொழில் வளர்ச்சியில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. பொதுத்துறை நிறுவனம், பெரிய மற்றும் நடுத்தர தொழில்களில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது. கொரோனா வைரஸ், நமது உடல் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உலக அளவில் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது. தற்போது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதன் சங்கிலித்தொடர் நிறுவனங்கள் மெல்ல செயல்பட தொடங்கியுள்ளன.

இந்த நெருக்கடியான நிலையில் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தீவிரத்தை தடுப்பது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது, பொருளாதார வளர்ச்சியின் நிலைத்தன்மையை ஏற்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் பல்வேறு ஊக்க திட்டங்களை அறிவித்துள்ளன.

இது தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்து, தங்களின் நிதிநிலையை சரிப்படுத்தி கொள்ள உதவும். கொரோனா நெருக்கடியான சூழ்நிலையிலும் அன்னிய நேரடி முதலீடு 42 சதவீதம் கர்நாடகத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் நாங்கள் புரட்சிகரமான திருத்தங்களை செய்துள்ளோம். இது தொழில் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தொழில் தொடங்க விரும்புகிறவர்கள் இப்போது எளிதாக நிலத்தை வாங்க முடியும்.

தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம். இதன்படி புதிதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள், அனைத்து அனுமதிகளையும் முன்னரே பெற வேண்டிய அவசியம் இல்லை. தொழில் தொடங்கிய பிறகு 3 ஆண்டுகளுக்குள் இந்த அனுமதிகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் நோக்கத்தில் புதிய தொழிற்கொள்கையை அரசு அறிவித்துள்ளது. சட்டத்திருத்தங்கள் மற்றும் கொள்கையில் உள்ள அம்சங்களை அமல்படுத்த தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கர்நாடகத்தை தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக மாற்றும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தொழில் நிறுவனங்களும் உதவ வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story