பாகிஸ்தானில் இருந்து திரும்பி 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடும் இந்திய இளம்பெண் மராட்டியம் வந்து தேடுகிறார்
பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்து 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடி வரும் இளம்பெண் நேற்று மராட்டியம் வந்தார்.
மும்பை,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் கீதா (வயது 30). இவர், வாய் பேச முடியாத, காது கேளாதவர் ஆவார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, 10 வயது சிறுமியாக இருந்தபோது, பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தன்னந்தனியாக தவித்துவந்த அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.
இந்தநிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை இந்தியாவின் மகள் என சுஷ்மா சுவாராஜ் வர்ணித்தார். மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தார்.
தற்போது இந்தூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் கீதா இருக்கிறார்.
இந்தியாவுக்கு வந்து 5 ஆண்டுகளாக அவர் தனது பெற்றோரை தேடிவருகிறார். இதற்கிடையே பல தம்பதிகள் கீதாவின் பெற்றோர் என கூறி அணுகினர். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாதால் அவர்களை கீதா தனது பெற்றோராக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் நம்பிக்கை குறையாமல் தனது குடும்பத்தை கண்டறியும் பாசப்போராட்டத்தில் கீதா இறங்கியுள்ளார்.
இந்தநிலையில் அவர் தன் வீட்டைப்பற்றி சொன்ன அடையாளங்களை வைத்து, மராட்டிய மாநிலம் நாந்தெட் நகருக்கு அவரை தொண்டு நிறுவனம் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றது. அங்கு பல இடங்களில் தேடியும் வீட்டையோ, பெற்றோரையே கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தாலும் தொடர்ந்து இங்கேயே தங்கி பெற்றோரை தடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
Related Tags :
Next Story