12 வயது சிறுமி கடத்தி மானபங்கம் பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
12 வயது சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
மும்பையை சேர்ந்தவர் பவன். இவரது 12 வயது மகள் கடந்த 2017-ம் ஆண்டு டியூசனுக்காக சென்றிருந்தார். இதன்பின் சிறுமி மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் சிறுமியின் தந்தை பவனின் செல்போனிற்கு அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி தாதாவின் கூட்டாளி பேசுவதாகவும், தனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும் இல்லையெனில் சிறுமியை கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்தான்.
இதற்கு பவன் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார். உடனே அந்த ஆசாமி, வீட்டில் உள்ள நகைகளை விற்று பணத்தை தரும்படி மிரட்டல் விடுத்தான். இச்சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை கடத்தி சென்றவர் பஸ் டிரைவர் பிரபு காடேக்கர்(வயது33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரின் செல்போன் நம்பர் உதவியுடன் பதுங்கி இருந்த இடத்தை கண்டறிந்தனர்.
பின்னர் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு காடேக்கரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரபு காடேக்கர், சிறுமியை மானபங்கம் செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 15 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து குற்றவாளி பிரபு காடேக்கருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story