ஆலங்குளம் அருகே, ஆட்டோ டிரைவர் கொலையில் ஒருவர் கைது - உறவினர்கள் போராட்டம்


ஆலங்குளம் அருகே, ஆட்டோ டிரைவர் கொலையில் ஒருவர் கைது - உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2020 5:06 AM IST (Updated: 17 Dec 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கொலையான ஆட்டோ டிரைவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நடத்திய சாலைமறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் இசக்கி துரை (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் ரெட்டியார்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது, அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த வாடகை கார் டிரைவரான சண்முகராஜ் (40) தகராறு செய்து இசக்கிதுரையை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் இசக்கிதுரை இறந்தார்.

இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் இசக்கிதுரை தனது ஆட்டோவில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் சண்முகராஜ் வந்தார். அப்போது இசக்கிதுரையின் ஆட்டோவின் முகப்பு விளக்கில் இருந்து அதிக ஒளி பாய்ச்சியதால் கண் கூசுவதாகவும், எனவே அந்த விளக்கின் வெளிச்சத்தை குறைக்குமாறும் கூறி சண்முகராஜ், இசக்கிதுரையிடம் தகராறு செய்தார். இந்த முன்விரோதத்தில் சண்முகராஜ், இசக்கிதுரையை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சண்முகராஜை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இசக்கிதுரையை கொலை செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இசக்கிதுரையின் மனைவிக்கு நிவாரண உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இசக்கிதுரையின் உடலை வாங்க மறுத்து அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து ரெட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னி வளவன் (ஆலங்குளம்), பாலசுந்தரம் (சங்கரன்கோவில்), கோகுலகிருஷ்ணன் (தென்காசி), தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இசக்கிதுரையின் மனைவி சொர்ணமதியிடம் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்ட நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை தாசில்தார் வழங்கினார். தொடர்ந்து அரசு வேலைக்கான விண்ணப்ப மனுவையும் சொர்ணமதியிடம் இருந்து தாசில்தார் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்த இசக்கிதுரையின் உடலை உறவினர்கள் பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

Next Story