கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்க பணி: 129 ஆண்டுகள் பழமையான ஆற்று பாலம் இடித்து அகற்றம்
கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்க பணியின் காரணமாக, 129 ஆண்டுகள் பழமையான ஆற்று பாலம் இடித்து அகற்றப்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர்-புதுச்சேரி மாநிலத்தை பிரிக்கும் வகையில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆறு கடலூர் அருகே வங்க கடலில் கலந்து வருகிறது. இதில் கடலூர் -புதுச்சேரி போக்குவரத்து வசதிக்காக ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரும்பிலான பாலம் கட்டப்பட்டது. அதாவாது 1,888 ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 1891-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்பின்னர் தற்போதைய காலக்கட்டத்தில் வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக, இந்த குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அதனருகிலேயே புதிதாக பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், பழைய இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதில் செடிகொடிகள் படர்ந்து புதர் மண்டி காட்சி அளித்தது.
இந்தநிலையில் போக்குவரத்து வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்கம் செய்து வருகிறது. முதற்கட்டமாக கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்காணங்குப்பம் பகுதியில் இருந்த சிறிய பாலம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த படியாக ஆல்பேட்டை பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, பழைய பாலத்தை இடிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது. தலைமுறைகள் பல கடந்து வரலாற்று சின்னமாக இருந்த பாலம் இடிப்பது பற்றி அறிந்த பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டனர். பலர் தங்களது செல்போனில் படம் பிடித்தும் சென்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தற்போது இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், கட்டுமான பணிகள் தொடங்கும். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story