கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்குப் பிறகு புதுவையில் 4-ந்தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
புதுவையில் கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்குப் பிறகு வருகிற 4-ந் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து படிப்படியாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளை திறக்கவும் அரசு முடிவு செய்து இளங்கலை, முதுகலை படித்து வரும் மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்க உள்ளன.
கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் வரும் ஜனவரி 4-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து பாடங்களில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் முழுவதும் பணியில் இருப்பார்கள். இந்த நாட்களில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது.
அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் முழுநேரம் செயல்படும். மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற ஏற்பாடுகளை அந்தந்த கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரிகளை பொறுத்தவரை இளங்கலை மற்றும் முதுகலை படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இன்று (வியாழக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும். அங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் 121 மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் நேர்மையான முறையில் வெளியிடப்படும். எனவே யாரும் குறுக்கு வழியில் செல்ல முயற்சி செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story