சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி சரமாரி குத்திக்கொலை - செம்பட்டி அருகே பரபரப்பு


சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி சரமாரி குத்திக்கொலை - செம்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2020 6:15 AM IST (Updated: 17 Dec 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

செம்பட்டி, 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவரது உறவினர், கடமலைக்குண்டு அருகே உள்ள வனத்தாயிபுரத்தை சேர்ந்த தெய்வேந்திரன் (42). வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று சோப்பு, தலையணை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். இதற்காக அவர்கள் 2 பேரும் செம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்தனர். மேலும் தினசரி அவர்களே சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணனுக்கும், தெய்வேந்திரனுக்கும் இடையே யார் சமையல் செய்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், தெய்வேந்திரனை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதில் சுதாரித்துக்கொண்ட தெய்வேந்திரன் கத்தியை பிடுங்கி, சரவணனை சரமாரியாக குத்தினார். இதில் சரவணன் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து அங்கிருந்து தெய்வேந்திரன் தப்பியோடிவிட்டார்.

இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சரவணன் அபயகுரல் எழுப்பினார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணனை அவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தெய்வேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் செம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story