வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2020 6:30 AM IST (Updated: 17 Dec 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி திண்டுக்கல்லில் விவசாயிகள் கொட்டும் மழையில் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதற்காக திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டனர். பின்னர் தரையில் அமர்ந்து வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லட்சுமணபெருமாள், செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இந்த காத்திருப்பு போராட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இதனால் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சாப்பிடுவதற்கு அங்கேயே மதிய உணவு தயாரானது. அதை போராட்டத்தில் பங்கேற்றவர்களை தயார் செய்தனர். பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அதேநேரம் ஒரே இடத்தில் காலை முதல் மாலை வரை அமர்ந்து இருந்ததால், சிலர் எழுந்து எழுச்சி பாடல்களை பாடினர். மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தபடி இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story