மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு; 150 பேர் கைது


மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு; 150 பேர் கைது
x

திருவையாறு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவையாறு, 

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உமையவள் ஆற்காடு கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமையவள் ஆற்காடு, பனவெளி, நாகத்தி ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவையாறு-தஞ்சை சாலையில் அம்மன்பேட்டை பகுதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

அப்போது கிராம மக்கள் மதுக்கடையை திறக்கமாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினர். ஆனால் போலீசார், அதிகாரிகளிடம் இதுபற்றி பேசிக்கொள்ளலாம், சாலை மறியலை கைவிடுங்கள் என மக்களிடம் கூறினர். ஆனால் அதற்கு கிராம மக்கள் உடன்படவில்லை.

இதையடுத்து போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து கண்டியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story