வேலூர் அருகே பட்டா மாறுதலுக்கு, ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது; கையும் களவுமாக பிடிபட்டார்
பள்ளிகொண்டா அருகே பட்டா மாறுதல் செய்வதற்காக ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிரம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 35). இலவம்பாடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் ராஜ்திலக், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். பணியில் இருக்கும் போது உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் ரேவதிக்கு தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது.
அதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு இலவம்பாடி கிராம நிர்வாக அலுவலக பணியில் சேர்ந்தார். சான்றிதழ்கள் கேட்டு வரும் பொது மக்களிடமும், பட்டா மாறுதல் கேட்டு வருபவர்களிடமும் கிராமநிர்வாக அலுவலர் ரேவதி லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் இலவம்பாடி பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவர் இறந்து விட்டதால் அவரது மகன் நடராஜன் தனது
பெயருக்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி கடந்த வாரம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
ரூ.2,500 லஞ்சம்
இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் ரேவதியை தொடர்பு கொண்டு பட்டா மாறுதல் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றி தருவேன் என்று ரேவதி கூறியதாக தெரிகிறது. அதற்கு ரூ.2,500 தருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடராஜனிடம் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை கொடுத்து, அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பிவைத்தனர். அதன்படி நடராஜன் ரசாயனம் தடவிய பணத்துடன் நேற்று காலை சுமார் 11.45 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர் ரேவதி அமர்ந்திருந்த அறைக்கு சென்றார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து
கண்காணித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
கிராமநிர்வாக அலுவலர் ரேவதியிடம், நடராஜன் பணத்தை கொடுத்தபோது அதைப்பெற்றுக் கொண்ட ரேவதி ஒரு வாரத்திற்குள் பட்டா கிடைக்கும் என்று கூறியுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று ரூ.2,500 லஞ்சம் வாங்கி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதியானதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story