டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தர்ணா வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு


டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தர்ணா வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 Dec 2020 10:34 AM IST (Updated: 17 Dec 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

வாவிபாளையம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. அங்கு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த வாவிபாளையம் அருகே வெலாங்காடு பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலைமறியல், கடையடைப்பு, முற்றுகை போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி கலால்துறை உதவி ஆணையர் தலைமையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வடக்கு தாசில்தார், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போராட்டக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் வரும் 90 நாட்களுக்குள் கடை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும், தவறும் பட்சத்தில் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தர்ணா போராட்டம்

மேலும் இந்த முடிவு அதிகாரிகளின் கையெழுத்துடன் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 90 நாட்களை தாண்டியும் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படவும் இல்லை. மூடப்படவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் போராட்டக்குழுவினர் இதுதொடர்பாக மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி நேற்று காலை முதல் வாவிபாளையம் சந்திப்பில் உள்ள கடைகள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாலையில் வாவிபாளையம் சந்திப்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டம்

போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதன் முடிவில் அடுத்த 10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

Next Story