சென்னிமலை அருகே பயங்கரம் மதுபோதை தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை 3 பேர் கைது


சென்னிமலை அருகே பயங்கரம் மதுபோதை தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2020 11:20 AM IST (Updated: 17 Dec 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை, 

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் சொந்தமாக ரிக் வண்டி வைத்துள்ளார். இவரிடம் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ஹர் மாவட்டம், சோரங்கா பகுதியை சேர்ந்த சுமன் (வயது 18), சுசில் ராஜக் (27), முன்னாராம் (35) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த சேசுராஜ் (வயது 34) ஆகியோர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் 4 பேரும் ஈங்கூர் அருகே உள்ள மோளக்காடு தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் 4 பேரும் வேலை முடிந்து வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மோளக்காடு தோட்டத்து வீட்டுக்கு வந்தனர். அப்போது சுசில் ராஜக், முன்னாராம் மற்றும் சேசுராஜ் ஆகியோர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சுமனிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.

3 பேர் அடித்தனர்

இதனால் அவர்கள் 3 பேரும் சுமனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அங்கு தோட்டத்துக்கு வந்த ரமேஷ் இதை பார்த்துள்ளார். உடனே தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த சுசில் ராஜக், முன்னாராம், சேசுராஜ் ஆகிய 3 பேரையும் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் இரவு 8.15 மணி அளவில் சுசில் ராஜக், முன்னாராம் மற்றும் சேசுராஜ் ஆகியோர் மீண்டும் சுமனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அங்கிருந்த ஒரு குழாயை எடுத்து சுமனின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதனால் அவர் அலறியபடி கீழே சாய்ந்தார். அதன்பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சாவு- 3 பேர் கைது

அப்போது ரிக் வண்டி மேலாளர் பரணி என்பவர் அங்கு வந்துள்ளார். பின்னர் மயங்கிக் கிடந்த சுமனை மீட்டு சிகிச்சைக்காக ஒரு வாகனம் மூலம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரிக் வண்டி உரிமையாளர் ரமேஷ் சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து சுமனை கொலை செய்ததாக சுசில் ராஜக், முன்னாராம், சேசுராஜ் ஆகியோரை கைது செய்தார்.

மதுபோதை தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈங்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story