பேரணாம்பட்டு அருகே, தந்தையை தாக்கிய வாலிபர் குத்திக்கொலை; அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு
பேரணாம்பட்டு அருகே தந்தையை தாக்கிய வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை கதவின் கண்ணாடி, ஜன்னலை அடித்து உடைத்தனர்.
தகராறு
பேரணாம்பட்டு அருகே உள்ள கள்ளிச்சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் அப்பு (19). இருவரும் கூலித்தொழிலாளர்கள். நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் செல்வம் என்பவர் இறந்து விட்டார். அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்க அலெக்ஸ் சென்றபோது, அங்கு சக்திவேலும் வந்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அலெக்ஸ், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் அலெக்ஸ் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது சக்திவேலின் மகன் அப்பு சென்று, நீ எப்படி என் அப்பாவை அடிக்கலாம்? என அலெக்சிடம் கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் அலெக்சின் மார்பு, வயிறு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இதில் மயங்கி விழுந்த அலெக்சை அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அலெக்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அலெக்ஸ் இறந்து போனதை அறிந்த அவரது உறவினர்கள் 200-க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அப்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனையில் கதவின் கண்ணாடிகள், ஜன்னலை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்ரண்டு ஸ்ரீதரன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அப்புவை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story