21 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.35½ லட்சம் ஊக்கத்தொகை அமைச்சர்கள் வழங்கினார்கள்
21வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.35½ லட்சம் ஊக்கத்தொகையை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.
ஈரோடு,
கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு ஊக்கத்தொகைகளை வழங்கினார்கள்.
ரூ.35½ லட்சம்
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 வீரர்கள், 15 வீராங்கனைகள் என மொத்தம் 21 பேருக்கு மொத்தம் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. அவர்கள் சிலம்பம், மேஜைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து, கேரம், கராத்தே, செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளார்கள். அதில் தங்கம் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார், கால்பந்து பயிற்சியாளர் சத்யா, கைப்பந்து பயிற்சியாளர் மைதிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story