மேற்கு ஆரணி ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் காரசார வாக்குவாதம்
மேற்கு ஆரணி ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசாரமாக பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய குழு கூட்டம்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சாதாரணக்கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக புதிதாக பொறுப்பேற்றுள்ள கே.ஹரி, ஏ.ஸ்ரீதர் ஆகிய இருவரும் உறுப்பினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடந்த உறுப்பினர்களின் விவாதம் வருமாறு:-
கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
எம்.வேலு (அ.தி.மு.க): தற்போது ஒன்றிய கவுன்சிலர்களாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், இதுவரை ஒன்றியத்தில் நிதி எவ்வளவு இருக்கிறது என்று எப்போது கேட்டாலும் இல்லை என்று கூறும் அவல நிலை இருந்து வருகிறது. பொறுப்பேற்று ஓராண்டு காலம் ஆகியும் தங்கள் பகுதியில் வளர்ச்சிப்பணிகளை செய்ய முடியவில்லை. பொதுமக்கள், ஊராட்சி தலைவர்களை மதிக்கிறார்கள். ஒன்றிய கவுன்சிலர்களை என்னவென்று கூட கேட்பதில்லை. இந்த நிலையில, கூட்டத்தில் வைத்துள்ள அஜண்டாவில் உள்ள அனைத்துத் தகவல்களுமே முன் பில் பாஸ் செய்வதற்கு
மட்டுமே நடத்தப்படுவதாக தெரிகிறது. இதனால் இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வேலு பேசிய நிலையில் “அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கூட்டத்தை ரத்து செய்யுங்கள், ஏன் கூட்டத்தை நடத்த வேண்டும், அரசு துறை அலுவலர்கள் யாரும் வரவில்லை, தகவல் தரப்படுகிறதா, இல்லையா? உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை, தலைவர் துணைத் தலைவர்களை கூட அனுமதி கேட்காமல் ஒன்றிய நிதிகளை குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு வழங்குகிறார்கள்” என ஒரே நேரத்தில் கூறினர்.
கலெக்டர் ஆரணிக்கு வர உள்ளார்
ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆ.வேலாயுதம் பதிலளிக்கையில், கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே இத்தகவல் தெரிவித்திருந்தால் கூட்டத்தை ரத்து செய்து விடலாம். இப்போது கூட்டம் நடத்திட வேண்டும், இனி வரும் காலங்களில் இதுபோல் தவறு வராமல் பார்த்துக் கொள்கிறோம், இப்போது அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் உங்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும், அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை (இன்று) மாவட்ட கலெக்டர் ஆரணிக்கு வர உள்ளார், அவரிடம் ஊராட்சிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கப்பட்ட குடிமராமத்துத் திட்ட நிதியின் பல்வேறு நிதிகளையும் உடனடியாக ஒன்றியத்துக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலர்களும் கூட்டத்துக்கு வரவேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தும் வரவில்லை. இனி அனைத்துக் கூட்டத்துக்கும் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தீர்மானம் நிறைவேற்றுவோம், எனப் பேசினார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி காரசாரமாக பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story