மாவட்டத்தில் 43 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


மாவட்டத்தில் 43 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2020 3:47 PM IST (Updated: 17 Dec 2020 3:47 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 43 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் ஒன்றியம் பொம்மஅள்ளி, உச்சம்பட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார்.

பின்னர் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற மக்களும் மருத்துவ சேவைகளை எளிதில் பெற வேண்டும் என்பதற்காக 2001-2006 ஆட்சிக்காலத்தில் ரூ.571 கோடி மதிப்பில் தாலுகா மருத்துவமனைகளை மேம்படுத்தினார். அதன்படி பாலக்கோடு, தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகா மருத்துவமனைகள் ரூ.24 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டன. அதேபோன்று மாவட்டத்தில் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 30 படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 41 அம்மா மினி கிளினிக்குகள், நகர பகுதிகளில் 2 அம்மா மினி கிளினிக்குகள் என மொத்தம் 43 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.

இந்த அம்மா மினி கிளினிக்குகள் கிராமப்புற பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 முதல் 7 மணி வரையிலும் செயல்படும். நகர பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 முதல் 8 மணி வரையிலும் செயல்படும். இந்த அம்மா மினி கிளினிக்கில், புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை, தாய் சேய் நல பணிகள், தடுப்பூசி போடுதல், தொற்றா நோய்கள், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் செந்தில்குமார், சிவபிரகாசம், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், நிலைய மருத்துவ அலுவலர் சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிசாமி, மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story