வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி கிருஷ்ணகிரியில் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் - 80 பேர் கைது
கிருஷ்ணகிரியில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் பழனி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், சிவராஜ், கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஏர் கழப்பை, மண் வெட்டி, நெற்பயிர்களை கையில் ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நஞ்சுண்டன், சின்னசாமி ஆகியோர் பேசினாாகள்.
இந்த போராட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின் மசோதா, 2020ஐ சட்டமாக்கக்கூடாது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடிக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story