திருவெண்ணெய்நல்லூர் அருகே, விவசாயியை கொன்ற அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயியை கொன்ற அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள வி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராயர் (வயது 55). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் குமார்(19) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 25-1-2011 அன்று பிரச்சினைக்குரிய இடத்தில் ராயர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமாருக்கும், ராயருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், தனது அண்ணன் சிவபாலனுடன்(20) சேர்ந்து ராயரை தடியால் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராயரின் மனைவி ராஜகுமாரி கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி செங்கமல செல்வன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் ராயரை கொன்ற குமார், சிவபாலன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
Related Tags :
Next Story