செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் கவலை
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. இந்த விற்பனைக்கூடத்துக்கு மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 4 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் ஏற்கனவே வியாபாரிகள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததால் சுமார் 2 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே குடோனில் வைக்கப்பட்டிருந்தது. மீதமிருந்த நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் செஞ்சியில் திடீரென மழை பெய்தது. இதனால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நெல்மூட்டைகளும் நனைந்து சேதமடைந்தன. இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த தார்ப்பாய் மூலம் நெல் மூட்டைகள் மூடப்பட்டன.
இருப்பினும் 500-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் முழுவதுமாக மழையில் நனைந்தன. இதனால் நெல் ஈரமாக இருப்பதால், கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இருப்பினும் மழையில் நனைந்தபடி விவசாயிகளும், தொழிலாளர்களும் நெல்லை எடை போட்டு வருகின்றனர். இதற்கிடையே செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மழையால் சேதமான நெல் மூட்டைகளை தாசில்தார் ராஜன் பார்வையிட்டார்.
வியாபாரிகளின் நெல் மூட்டைகள் தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் ஆக்கிரமித்து இருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையால் நனைவது தொடர்கதையாக உள்ளது. விரைவில் இதற்கு முறையான தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, இங்கு விரைவில் புதிதாக கட்டப்பட்ட குடோன் திறக்கப்பட உள்ளது. மேலும் குடோனில் உள்ள வியாபாரிகளுக்கான நெல் மூட்டைகளை உடனடியாக எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்த வெளி இடத்தில் மேற்கூரை அமைக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story