கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையின் மொத்த நீர்மட்டம் 36 அடி ஆகும். கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையின் காரணமாக கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மணிஆறு மற்றும் முக்தா ஆற்றின் வழியாக மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மொத்த கொள்ளளவான 36 அடியை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 4-ந் தேதி முதல் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விவசாய பாசனத்திற்காக மணிமுக்தா அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடி நீர், பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 15 கன அடி நீர் திறந்து வைத்தார். இன்று (அதாவது நேற்று) முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி வரை 47 நாட்களுக்கு இதே அளவில் தண்ணீர் பாய்ந்தோடும். பின்னர் அடுத்த 45 நாட்களுக்கு (1-2-2021-ந் தேதி முதல் 23-3-2021-ந் ந்தேதி) வரை பழைய பாசன ஆற்றில் வினாடிக்கு 15 கனஅடி, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 56 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இதன் மூலம் புதிய பாசனம் மூலம் அகரக்கோட்டாலம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், வீரசோழபுரம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர் ஆகிய 10 கிராமங்களும், பழைய பாசனம் மூலம் பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி, சித்தலூர், உடையநாச்சி, கூத்தக்குடி, பானையங்கால், கொங்கராயபாளையம் உள்ளிட்ட 17 கிராமங்களும் என மொத்தம் 27 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
நிகழ்ச்சியில் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, முன்னாள் எம்.பி.காமராஜ், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பச்சையாபிள்ளை, நகர செயலாளர் பாபு, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர்கள் கணேசன், பிரபு, வினோதினி, சுதர்சன் மற்றும் பாசன விவசாய சங்கத்தினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story