மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோவையில் 400 பவுண்டரிகளில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது - ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு


மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோவையில் 400 பவுண்டரிகளில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது - ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2020 11:06 PM IST (Updated: 17 Dec 2020 11:06 PM IST)
t-max-icont-min-icon

மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரிகளில் நேற்று முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. இதனால் ரூ.30 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்தில் 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்கூடங்களில் வெட் கிரைண்டர், பம்புசெட் உள்ளிட்டவற்றிற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பவுண்டரி தொழிற்கூடங்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது.

இதன்காரணமாக பவுண்டரி தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட குறு, சிறு பவுண்டரிகள் தொழில் அதிபர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 400 பவுண்டரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் இங்கு பணிபுரியும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து உள்ளனர்.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:-

கடந்த 4 மாதங்களில் பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான நிலக்கரி, பிக் அயன், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை 15 முதல் 60 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. செயற்கையாக மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க எடுக்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை சார்ந்துள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் இத் தொழிலை சார்ந்து இயங்கி வரும் வெட் கிரைண்டர், என்ஜினீயரிங், மோட்டர் பம்புகள், ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே பவுண்டரி தொழிற்கூடங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் சிவக்குமார் கூறியதாவது:-

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குறுந்தொழில், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் லட்சகணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் மோட்டார்கள், பம்புசெட்கள், வெட் கிரைண்டர்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல் மெஷின் உதிரிபாகங்கள் மற்றும் ெரயில்வே, பாதுகாப்பு துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் இந்த தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பவுண்டரி சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் ரூ.15 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story