முத்தையாபுரத்தில் உப்பளங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
முத்தையாபுரத்தில் உப்பளங்களுக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இருந்து முத்தையாபுரத்தில் உள்ள உப்பளங்கள் மற்றும் தனியார் குடோன்களுக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த சாலை சகதியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது அங்குள்ள தனியார் குடோன்களுக்கு சென்று வரும் லாரிகளின் டயர்களில் அந்த சாலையில் உள்ள சகதிகள் முழுவதுமாக ஒட்டி கொள்கின்றன. அப்படியே அந்த லாரிகள் தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலைக்கு வரும் போது, டயர்களில் ஒட்டி உள்ள சகதிகள் சாலையில் விழுந்து, முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் முதல் உப்பாற்று ஓடை வரை நெடுஞ்சாலை முழுவதும் சகதியாக காட்சியளிக்கிறது.
இதனால், அந்த வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழ நேரிடுகிறது. இரவு நேரங்களில் இந்த சகதியில் வழுக்கி விழுந்து சிலர் காயமும் அடைந்துள்ளனர்.
எனவே தனியார் குடோன்களுக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலையில் படிந்துள்ள சகதி வெயில் அடித்த பின்பு மணல் துகள்களாக மாறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்களில் அந்த மணல் விழுந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் படியும் மணல் துகள்களை அகற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story