கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் மார்கழி இசை நிகழ்ச்சி; சென்னை மியூசிக் அகாடமி நடத்துகிறது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை மியூசிக் அகாடமியில் பிரபலமான மார்கழி இசை விழா இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
மார்கழி மகா உற்சவம்
மார்கழி மாதம் வந்துவிட்டாலே, மார்கழி மகா உற்சவம் என்று சென்னை மாநகரமே கச்சேரிகளால் களைக்கட்டும். இதில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் நடத்தப்படும் மார்கழி இசை நிகழ்ச்சியை ரசிப்பதற்காக ரசிகர்கள் பெருமளவில் வருவது உண்டு. இங்கு நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் 300-க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை கச்சேரிகளை நடத்துவார்கள். அவர்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை தாண்டி, வெளிநாடுகளில் இருந்தும் இசை பிரியர்கள் மார்கழி மாதம் சென்னைக்கு வருவது வழக்கம்.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த முறை சென்னை மியூசிக் அகாடமியில் மார்கழி இசை விழாவை ஆன்-லைன் மூலம் நேரலையாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மியூசிக் அகாடமி
இதுகுறித்து சென்னை மியூசிக் அகாடமி தலைவரும், இந்து பத்திரிகையின் இயக்குனருமான என்.முரளி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் இசை நிகழ்ச்சிகள் டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 1-ந்தேதி வரையிலும், 3-ந்தேதி இருந்து 9-ந்தேதி வரை நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக வருகிற 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை 8 நாட்கள் இசை நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்படுகிறது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு நான் வரவேற்கிறேன். எச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷினி மல்கோத்ரா ஆன்லைன் மூலம் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
கச்சேரிகள் அனைத்தும் நேரலையில் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இளநிலை கலைஞர்களுக்கு ஒன்றரை மணி நேரமும், முதுநிலை கலைஞர்களுக்கு இரண்டரை மணிநேரமும் ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு இளநிலை கலைஞர்களுக்கு ஒரு மணிநேரமும், முதுநிலை கலைஞர்களுக்கு ஒன்றரை மணிநேரமும் ஒதுக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் சுருக்கமாக தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
27 கச்சேரிகள்
இசை பிரியர்கள் முதுநிலை கலைஞர்களின் கச்சேரிகள் கேட்பதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு https://musicacademymadras2020.eventvirtually.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
வீடுகளில் இருந்தபடியே கர்நாடக இசை கச்சேரி, நாதஸ்வரம், வீணை, வாய்ப்பாட்டு மற்றும் புல்லாங்குழல் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முடியும். முதல் நாள் இரண்டு கச்சேரியும் மற்ற நாட்களில் சராசரியாக 4 கச்சேரிகள் வீதம் மொத்தம் 27 கச்சேரிகள் நடக்கிறது. இதில் முதுநிலை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் மியூசிக் அகாடமி உறுப்பினர்களுக்கு இலவசமாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். சென்னையில் இருப்பவர்கள் அல்லாமல் எந்த மாநிலத்தில் இருந்தாலும், உலகில் எந்த நாடுகளில் இருந்தாலும் இசை நிகழ்ச்சிகளை எளிதாக கண்டு களிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story