கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றது அம்பலம் மனைவி-கள்ளக்காதலன் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றது அம்பலம் மனைவி-கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 18 Dec 2020 4:55 AM IST (Updated: 18 Dec 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு தோட்ட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி-கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றது அம்பலமாகி உள்ளது.

பாகல்கோட்டை,

பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா ஹலகலி பட்டியனே கிராமத்தை சேர்ந்தவர் எமனப்பா(வயது 32). இவரது மனைவி ருக்மவ்வா. இந்த தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. எமனப்பா கரும்பு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற எமனப்பா பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை மனைவி ருக்மவ்வா பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எமனப்பா மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் முதோல் போலீஸ் நிலையத்தில் ருக்மவ்வா புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் மாயமான எமனப்பாவை தேடிவந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் எமனப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் ருக்மவ்வாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ருக்மவ்வா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது ருக்மவ்வாவுக்கும், எமனப்பாவின் உறவினரான முடகப்பா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். இதுபற்றி அறிந்த எமனப்பா, ருக்மவ்வாவையும், முடகப்பாவையும் எச்சரித்து உள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த எமனப்பா, ருக்மவ்வாவை அடித்ததாக தெரிகிறது. இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த ருக்மவ்வாவும், முடகப்பாவும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் எமனப்பாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த 9-ந் தேதி கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து எமனப்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலை அங்கு போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. ருக்மவ்வா கொடுத்த தகவலின்பேரில் அவரது கள்ளக்காதலன் முடகப்பாவையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story