குழந்தை இல்லாததால் லட்சுமி தற்கொலை செய்தாரா? பரபரப்பு தகவல்கள்
குழந்தை இல்லாததால் லட்சுமி தற்கொலை செய்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் சி.ஐ.டி. பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த லட்சுமி மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதுதொடர்பாக அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியின் நண்பரான மனோகர் உள்பட 4 பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் குழந்தை பிறக்காததால் லட்சுமி தற்கொலை செய்து இருக்கலாம் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி அருகே துருபலகட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வெங்கடேஷ். இவரது மகள் தான் லட்சுமி ஆவார்.
வெங்கடேஷ் சிக்கமகளூருவில் பணியாற்றிய போது அங்கு குடும்பத்தினருடன் வசித்தார். அப்போது தான் லட்சுமி பிறந்து உள்ளார். பூர்வீகம் கோலார் மாவட்டம் என்றாலும் லட்சுமி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சிக்கமகளூருவில் தான். அங்கு தான் அவர் என்ஜினீயரிங் படிப்பும் படித்து இருந்தார்.
இந்த நிலையில் லட்சுமிக்கும், நவீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் லட்சுமியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் எதிர்ப்பையும் மீறி கடந்த 2012-ம் ஆண்டு நவீனை, லட்சுமி கரம்பிடித்து இருந்தார். பின்னர் நவீனுக்கு துபாயில் வேலை கிடைத்ததால் நவீனும், லட்சுமியும் துபாய்க்கு சென்று வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் பெங்களூரு திரும்பிய லட்சுமி கே.பி.எஸ்.சி. (கர்நாடக நிர்வாக தேர்வாணையம்) தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு சி.ஐ.டி. பிரிவில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அவர் சி.ஐ.டி. பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே திருமணம் நடந்து 8 ஆண்டுகள் ஆனபோதிலும் லட்சுமிக்கு குழந்தை பிறக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து வேலையை விட்டுவிட்டு நவீன் பெங்களூருவுக்கு வந்து உள்ளார். பின்னர் வேலைக்கு எதுவும் அவர் செல்லவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாகவும், குழந்தை பிறக்காதது தொடர்பாகவும் நவீனுக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே லட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்து உள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமி, காலில் அறுவை சிகிச்சையும் செய்து இருந்தார். இருந்தாலும் அவர் ஓய்வு எடுக்காமல் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். உயர் அதிகாரிகள் நடத்திய கூட்டத்திலும் கலந்து கொண்டார். குழந்தை பிறக்காததால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்து விடுபட லட்சுமி அடிக்கடி நண்பர்கள் நடத்திய விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதுபோல தனது நண்பரான மனோகர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான், ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் லட்சுமி பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். குழந்தை பிறக்காத ஏக்கத்தில் இருந்த லட்சுமி தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story