பள்ளிப்பட்டு அருகே இளம்பெண் மர்மசாவு; கணவர், மாமனார், மைத்துனர் கைது


கணவர் சந்திரபோசுடன் திவ்யா இருப்பதை படத்தில் காணலாம்.
x
கணவர் சந்திரபோசுடன் திவ்யா இருப்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 18 Dec 2020 5:18 AM IST (Updated: 18 Dec 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவரது கணவர், மாமனார், மைத்துனர் கைது செய்யப்பட்டனர்.

மாமியார் கொடுமை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் பத்ரய்யா. இவருடைய மனைவி மகபூப். இவர்களுடைய மகள் திவ்யா(வயது 23). இவருக்கும், பள்ளிப்பட்டு அருகே உள்ள கர்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் (35) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மாமியார் ராஜேஸ்வரி (50) குழந்தை இல்லாததை காரணம் காட்டி திவ்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
இதற்கிடையில் மாமனார் பெருமாள் மற்றும் கணவரின் தம்பி வீர பிரதாப்சிங் (30) இருவரும் திவ்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த திவ்யா, கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபோஸ், வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்துள்ளதாக கூறி மனைவியை ஆந்திராவுக்கு அழைத்து செல்வதுபோல் தனது வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

அதன்பிறகு திவ்யாவின் தந்தை பத்ரய்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட சந்திரபோஸ், திவ்யாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது.

மர்மசாவு
உடனே பத்ரய்யா தனது மனைவி் மற்றும் மகனுடன் அங்கு சென்று பார்த்தபோது திவ்யா வீட்டு திண்ணையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் அருகே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரையும் காணவில்லை.

இதுகுறித்து திவ்யாவின் தந்தை பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் திவ்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரை கணவர் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி கொடுமைப்படுத்தியதாகவும், மாமனார் பெருமாள், மைத்துனர் வீர பிரதாப் சிங் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.

கணவர் கைது
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் கணவர் சந்திரபோஸ், மாமனார் பெருமாள், மைத்துனர் வீர பிரதாப் சிங் ஆகியோரை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக உள்ள மாமியார் ராஜேஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திவ்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story