கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளும் தேர்தல் பிரசாரத்துக்கு சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும் - நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
வருகிற 23-ந் தேதி கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளும் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை,
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மத்திய அரசு புதிதாக நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும், இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த கூட்டம் ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கும் அ.தி.மு.க. அரசை இந்த செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற தேர்தல் பிரசார கூட்டம் வருகிற 23-ந் தேதி நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டசபை தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குரலாக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் வருகிற 28-ந் தேதி நெல்லைக்கு வருகிறது. அந்த குழுவில் நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கூற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், செல்வ கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story