வலங்கைமான் ஒன்றியத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க அரசு முடிவு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது
வலங்கைமான் ஒன்றியத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. வலங்கைமான் பகுதியில் முதன் முதலாக மேடையில் ஊராட்சி ஆண்டான்கோவில் கிராமத்தில் பெரியார் நகர் புதிதாக உருவாக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குப்ப சமுத்திரம், விருப்பாச்சிபுரம், கோவிந்தகுடி, ஆவூர், விளத்தூர், களத்தூர், மருவத்தூர், தொழுவூர், திருவோணமங்கலம், ஆலங்குடி, உள்பட அனைத்து ஊராட்சி கிராமங்களிலும் படிப்படியாக தொகுப்புவீடுகள் கட்டப்பட்டு சுமார் 48 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
மக்கள் அவதி
இந்தநிலையில் அனைத்து ஊராட்சி கிராமங்களிலும தொகுப்பு வீடுகள் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் வசிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் வீடுகள் முழுவதும் இடிந்து விழுந்து உள்ளது. எனவே இந்த வீடுகளை சீரமைக்க கோரி அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கணக்கெடுப்பு பணி
இதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசு உத்தரவுப்படி பழுதடைந்த தொகுப்பு வீடுகளை முழு வீச்சில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதில் ரூ.50 ஆயிரத்துக்கு பழுது நீக்கும் தன்மை கொண்ட வீடுகள், முற்றிலும் அகற்றி விட்டு புதிதாக கட்டப்படும் வீடுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி வலங்கைமான் ஒன்றிய ஆணையர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் நடைபெறுகிறது. இதனால் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் நிம்மதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story