35 சதவீதம் குறைக்கப்பட்டாலும், 65 சதவீத பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க 150 பள்ளி வேலை நாட்கள் தேவை; கல்வியாளர்கள் கருத்து
பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு 35 சதவீத பாடத்திட்ட குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடத் திட்டத்தை முழுமையாக முடிக்க 150 பள்ளி வேலை நாட்கள் தேவைப்படும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
கிராமப்புற மாணவர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்று வருகின்றனர்.
ஆனாலும் நேரடியாக வகுப்புகளுக்கு சென்று பாடங்களை கற்றுக் கொள்வதைப்போல் மாணவர்களால் பாடங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீடுகளில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் அவர்களால் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு எளிதாக உள்ளது.
ஆனால் கிராமப்புற மாணவ மாணவிகள் போதுமான வசதி இல்லாத நிலையில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பாடத் திட்ட குறிப்பு
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு 35 சதவீதமும், மற்ற மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீதமும் பாடத்திட்டம் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளி திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட வில்லை.
குழப்பம்
இந்த அறிவிப்பு குறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்ததாவது:-
மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தை குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் பள்ளி திறக்கப்படும் நாள் அறிவிக்கப்படாத நிலையில் 65 சதவீத பாடத்திட்டத்தை முடிப்பதற்கு குறைந்தபட்சம் 150 பள்ளி வேலை நாட்கள் அவசியம் தேவை. தற்போதைய நிலையில் அது பற்றி தெளிவாக எதுவும் தெரிவிக்கப்படாததால் பெரும் குழப்பம் நிலவுகிறது.
ஏற்கனவே பிளஸ்-2 மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு எழுத உள்ள நிலையில் அவர்களுக்கு அதற்கான பாடங்கள் குறித்த விளக்கங்களை முழுமையாக கற்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் அரையாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தாலும் அதற்கான பாடத்திட்டங்கள், தெளிவான விளக்கங்கள் தரப்படவில்லை. எனவே பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்ட குறைப்பு மற்றும் அரையாண்டு தேர்வு குறித்து தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story