மினி கிளினிக் திறப்பு விழா: அமைச்சர் முன்னிலையில் தி.மு.க- அ.தி.மு.க.வினர் இடையே தள்ளு முள்ளு; அழைப்பிதழில் எம்.எல்.ஏ. பெயர் போடாததால் தகராறு
திருப்பத்தூர் அருகே நடந்த மினி கிளினிக் திறப்பு விழா அழைப்பிதழில் எம்.எல்.ஏ. பெயர் போடாததால் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ. பெயர் இல்லை
திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் விழா மேடைக்கு வந்து, அரசு விழா அழைப்பிதழில் எம்.எல்.ஏ. பெயரை ஏன் போடவில்லை? எனக் கேட்டார்.
உடனே அமைச்சர் வீரமணி குறுக்கிட்டு, உங்களுக்கு அவை நாகரிகம் தெரியாதா? எனக் கேட்டார். அதைக் கேட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் திடீர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை மேடையில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து வெளியே வாருங்கள் என்றனர். அதற்குள் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.- அ.தி.மு.க. தள்ளுமுள்ளு
உடனே அமைச்சர் ஆளும் கட்சியாக இல்லாதபோதே, தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? என மைக்கில் பேசினார். அந்த நேரத்தில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் என்.திருப்பதி தனது ஆதரவாளர்களுடன் வந்து எதற்காக உங்கள் பெயரை போட வேண்டும்? இது, அ.தி.மு.க. அரசின் சாதனை, என்றார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர் வெளியே வந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை, எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட வேண்டாம், எனக் கேட்டுக்கொண்டார். அப்போது அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சம்பவம் மாடப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story