திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை சிறுவன் உள்பட 7 பேர் கைது


திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை சிறுவன் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2020 5:19 AM GMT (Updated: 18 Dec 2020 5:19 AM GMT)

திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி, 

திருப்பூர் பள்ளிவாசல் வீதியைச்சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 35) பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 2 பேரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் கல்லாங்காடு பகுதியில் விட்டுவிட்டு அதே பகுதியில் உள்ள டீக்கடை முன்பாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கல்லாங்காடு பகுதியைச்சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் ரமேஷ் (வயது 24) வந்தார். அப்போது ரமேஷ் மதுபோதையில் இருந்ததால் தனது நண்பரான மணிகண்டனை தரக்குறைவாக பேசினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். உடனே ரமேஷ் தனது நண்பர்களான சுபாஷ் (24), முருகன் (23), சஞ்சய்குமார்(22), ரவிக்குமார் (20), 15 வயது சிறுவன், தங்கமாயன் (19) ஆகியோரை அழைத்து வந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் ரவிக்குமார் மற்றும் சுபாஷ் ஆகியோர் அருகில் கிடந்த மரக்கட்டையால் மணிகண்டனின் தலையில் பலமாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

7 பேர் கைது

உடனே அருகில் இருப்பவர்கள் திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் மணிகண்டனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 15 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 6 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 15 வயதான சிறுவனை கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். 

Next Story