பெருந்துறையில் கற்கள் விழுந்த வீட்டில் அரிசி மழையாக கொட்டியது நாற்காலி-மெத்தைகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு
பெருந்துறையில் கற்கள் விழுந்த வீட்டில் அரிசி மழையாக கொட்டியது. மேலும் நாற்காலி, மெத்தைகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவருடைய மனைவி திலகா (வயது 48). இவர்களுடைய மகள் தாரணி (9). தெய்வசிகாமணி இறந்த பிறகு திலகா தனது மகளுடன் பெருந்துறை ராஜவீதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திலகாவின் வீட்டில் எதிர்பாராத மர்ம சம்பவங்கள் நடந்தது அவரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. வீட்டில் திடீரென கற்கள் பறந்து வந்து விழுந்தன. சமையல் அறையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் வெளியே வந்து விழுந்தன. திலகாவுக்கும், தாரணிக்கும் மர்மநபர்கள் அடிப்பதை போல உணர்வுகள் ஏற்பட்டன. இந்த தொடர் சம்பவங்களால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அரிசி மழை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்குள் அரிசி மழை பெய்தது திலகாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வீட்டில் சமையல் அறையில் இருந்த அரிசி மூட்டையை அவர் சென்று பார்த்தபோது, காலியாக இருந்தது. மூட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அரிசிதான் மழையாக கொட்டியதை அவர் தெரிந்து கொண்டார். இதேபோல் படுக்கை அறையில் இருந்த பஞ்சு மெத்தை, படுக்கைகள் அதுவாகவே பறந்து வந்து தரையில் விழுந்ததை திலகா நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் பிளாஸ்டிக் இருக்கை தூக்கி எறியப்பட்டு சேதமடைந்தது.
அதுமட்டுமின்றி திலகாவின் கன்னத்தில் யாரோ அடிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களது கண் முன்னே சமையல் அறையில் இருந்து பால் பாத்திரம் பாலோடு தானாக வெளியே வந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த சிறுமி தாரணி அலறினாள். அவளிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுமியின் முதுகில் ஊசி குத்தப்பட்ட சிறிய காயம் இருந்தது. அதை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவருக்கும் முதுகில் அடி விழுந்தது. இதனால் கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்ய சக்தி ஏதோ வீட்டில் இருப்பதாக முடிவு செய்த போலீசார் அங்கிருந்து வெளியேறினார்கள்.
சாமி தரிசனம்
இந்த சம்பவங்களால் மிகவும் மனமுடைந்துபோன திலகா தனது மகளை அழைத்து கொண்டு கோபியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அந்த கோவிலில் கொடுக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட தாயத்தை கைகளில் கட்டிக்கொண்டு அவர்கள் வீடு திரும்பினார்கள். இதற்கிடையே குடும்ப வக்கீலான திருமலையிடம் திலகா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதியில் குடியேறுமாறு அறிவுறுத்தினார்.
இந்த மர்ம சம்பவங்கள் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story