கோவையில், அம்மா மினி கிளினிக் தொடக்கவிழா - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
கோவையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை,
கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், சிங்காநல்லூர் மற்றும் சிவானந்தாகாலனியில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் நேற்று தொடங்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மினி கிளினிக்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் தலைமையின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் அம்மா மினி கிளினிக்கை அறிமுகப்படுத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஏற்படும் சிரமம், செலவு மற்றும் நேரம் இவைகளை குறைக்கும் பொருட்டு இந்த அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சாதாரண காய்ச்சல், தொற்றா நோய் போன்ற நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க இவை பயன்படும்.
இந்த அம்மா மினி கிளினிக்குகள் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும், ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்திற்கு 70 மினி கிளினிக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5 நடமாடும் கிளினிக்குகள் ஆகும். நமது மாவட்டத்திற்கு முதற்கட்டமாக மாநகரப்பகுதிகளில் 7 மினி கிளினிக்களும், ஊரகப்ப குதிகளில் 30 மினி கிளினிக்குகளும் திறக்கப்பட உள்ளது. அதன்படி சிங்காநல்லூர் நெசவாளர் காலனி, சிவானந்தா காலனி பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மினி கிளினிக்கில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் உடனுக்குடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை 11 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், நகர் நல அலுவலர் ராஜா மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம், மாநகர் மாவட்ட பொருளாளர் பார்த்தீபன், பகுதி செயலாளர்கள் ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், வெண்தாமரைபாலு மற்றும் பிரபாகரன், அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.அசோக்குமார், வர்த்தக அணி மாநகர செயலாளர் அர. தமிழ் முருகன், டென்மார்க் ரமேஷ், பாலமுரளி, சி.டி.சி வேல்முருகன், தமிழ்மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் செல்வராஜ், தெற்கு மாவட்ட தலைவர் வி.வி.வாசன், இளைஞர் அணி தலைவர் கார்த்திக் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story