2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்களுக்காக நவீனவசதியுடன் பிரசார வாகனங்கள் - கோவையில் தயாராகிறது
2021 சட்டசபை பொதுதேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களுக்காக நவீனவசதியுடன் பிரசார வாகனங்கள் கோவையில் தயாராகி வருகிறது.
கோவை,
2021-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில முழுவதும் நீண்டதூரம் பயணித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அவர்கள் பல ஊர்களுக்கு நீண்டதூரம் பயணம் செய்வதற்காக நவீன வசதியுடன் கூடிய பிரசார வாகனங்கள் கோவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரசார வாகனங்களை தயாரிக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரசார வாகனத்தில் உள்ள வசதிகள் குறித்து அந்த நிறுவன உரிமையாளர் ரியாஸ் கூறியதாவது:-
தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த தேசிய தலைவர்களுக்கும் நாங்கள் பிரசார வாகனங்கள், பாதுகாப்பு வாகனங்களை வடிவமைத்து கொடுத்து வருகிறோம்.
அந்த வாகனத்திற்குள் இருக்கும் தலைவர்கள் அமர்ந்தபடி இருக்கை மேலே வரும், கீழே இறங்கும் வகையில் "ஹைட்ராலிக் லிப்டிங்" மற்றும் "மேனுவல் லிப்டிங்" வசதி, சுழலும் இருக்கைகளை வடிவமைக்கிறோம்.
நீண்ட தூரம் பயணம் செய்யும் தலைவர்கள் ஓய்வெடுக்க வசதியாக ஓய்வறை, முக்கிய பிரமுர்களுடன் அமர்ந்து பேச சோபா வசதி மற்றும் கழிவறை உள்ளிட்டவை வடிவமைக்கப்படுகிறது. வாகனத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்களை தொண்டர்கள் பார்க்க வசதியாக ஒளி அலங்காரம் மற்றும் பிரசாரம் செய்யவும் வசதி செய்யப்படுகிறது.
தலைவர்கள் பேசுவதை துல்லியமாக கேட்க நவீன தொழில் நுட்பத்து டன் கூடிய (ஒலி) சவுண்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டு உள்ளது. 15 பாதுகாப்பு அதிகாரிகள், தலைவர்களின் வேனை சுற்றி நிற்கும் வகையில் கைப்பிடி, படிக்கட்டுகள் அமைக்கப்படுகிறது.
2021 சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு தலைவர்களின் பிரசார வாகனங்களை தயாரித்து வருகிறோம். அந்த பணி இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story