தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோட்டில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோட்டில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி,
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் நாகப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரங்கன், கவுரவத் தலைவர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜமாபந்தி சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம உதவியாளர் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் முனுசாமி, பொருளாளர் பச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு பெறும்போது, கிராம நிர்வாக அலுவலர்கள் 20 சதவீதமும், அலுவலக உதவியாளர்கள் 10 சதவீதமும் என முழுமையாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் அமல்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க மாவட்ட, வட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம வருவாய் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலக்கோடு வட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்குதல், இயற்கை இடர்பாடு காலத்தில் சிறப்பு படி வழங்குதல் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story