மாவட்டத்தில் 54 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் - அமைச்சர் சரோஜா பேட்டி


மாவட்டத்தில் 54 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் - அமைச்சர் சரோஜா பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2020 7:54 PM IST (Updated: 18 Dec 2020 7:54 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 54 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா கூறினார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே தட்டான்குட்டை ஏரிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு உள்ள கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையத்தை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அவர் கழிவு நீர் சேகரிக்கும் விதம், சுத்திகரிப்பு செய்யும் விதம், சுத்திகரிப்புக்கு முன்பு பாக்டீரியாக்கள் நீக்குதல், ஆக்சிஜன் அளிப்பதற்கான வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன்பிறகு அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதியோர் உதவித் தொகை வழங்குவது முதல் அம்மா மினி கிளினிக் என அனைத்து திட்டங்களும் மக்களை தேடி நேரில் செயல்படுத்தப்படுகிறது. அம்மா மினி கிளினிக்கிற்காக 2 ஆயிரம் டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

இதற்காக தொகுப்பூதியத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் ஆகியோர் பணியில் இருப்பார்கள். அந்தந்தப் பகுதியில் உள்ள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 54 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும். இதில் முதற்கட்டமாக 18 மினி கிளினிக்குகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம் என முதல்-அமைச்சர் கூறுவதைப்போல கிராமப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் அந்தந்த கிராமங்களிலேயே அவர்களின் வீடு தேடி மருத்துவ சேவையை தமிழக அரசு வழங்குகிறது. மேலும் ரூ.1,032 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம்-நெடுங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் மற்றும் நகர வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் பிரபாகரன், நகராட்சி பொறியாளர் குணசீலன், பாதாள சாக்கடை திட்ட உதவி செயற்பொறியாளர்கள் சிவமுருகன், மதியழகன், உதவி பொறியாளர்கள் தங்கவேல், சங்கீதா, வீட்டு வசதி சங்கத் தலைவர் கோபால், ஆர்.சி.எம்.எஸ். சங்க துணை தலைவர் எஸ்.பி.மனோகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சீனிவாசன், சுந்தரம், ஸ்ரீதர், ஜெகன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ராதா சந்திரசேகர், நகர மகளிர் அணி செயலாளர் மாதேஸ்வரி, தொழிலதிபர் சீனிவாசன் உள்பட அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story