மாவட்டத்தில் மிதமான மழை- ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்


மாவட்டத்தில் மிதமான மழை- ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2020 8:40 PM IST (Updated: 18 Dec 2020 8:40 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக வீரகனூரில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஏற்காட்டில் கடுமையான பனிமூட்டம் இருந்தது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் மாவட்டத்தில் தலைவாசல், வீரகனூர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், ஏற்காடு, தம்மம்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இதேபோல் சேலத்திலும் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களும், பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரமுடியால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் குறைந்ததால் காய்கறிகள் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் குடைகளை பிடித்தப்படியும், மழைகோர்ட்டு அணிந்தபடியும் சென்றனர். சேலத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் இல்லாமல் மேகமூட்டமாகவே காணப்பட்டது.

அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததாலும், குளிர்ந்த காற்று வீசியதாலும் இரவில் கடும் குளிர் நிலவியது.

ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையை தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மழையின் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். சாலையோர கடைகள் மூடப்பட்டன.

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சொட்டர், குல்லா அணிந்து குடைபிடித்தபடி வீதிகளில் சென்றனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 62 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தம்மம்பட்டி-50, காடையாம்பட்டி-2.5, கரியகோவில்-30, கெங்கவல்லி-25, ஆணைமடுவு-29, வாழப்பாடி-9.5, ஏற்காடு-20, ஓமலூர்-2, சங்ககிரி-4.2, சேலம்-2.1, ஆத்தூர்-37.4, பெத்தநாயக்கன்பாளையம்-37 ஆகும்.

Next Story