15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் - சேலத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
15 நாட்களுக்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் தற்போது வரும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று சேலத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சேலம்,
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காது, மூக்கு, தொண்டை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உணவகம் உள்பட பல இடங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் கட்டாயம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,000 முதல் 1,100 வரை தான் இருக்கிறது. சேலத்தில் 2 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் 10 முதல் 20 பேருக்குத்தான் தொற்று உறுதியாகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 83 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதமாக உள்ளது.
பாதிப்பு 2 சதவீதமாக இருக்கிறது. இதனை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்பது தான் அரசின் குறிக்கோள்.
பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கைவிடக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்வரை ஒவ்வொருவரும் களப்பணியாளர்கள் போன்று முக கவசம் அணிய வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு மாணவர்களுக்கு பரிசோதிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
தற்போது தமிழகம் முழுவதும் இறுதியாண்டு, முதுநிலை மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகிறார்கள். எனவே தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் தற்போது வரும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை நடத்தப்படும். இதற்காக மாணவர்கள் பயப்படத்தேவையில்லை.
மேலும் மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கல்லூரி, மார்க்கெட்டுகளில் எவ்வாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது, பரிசோதனை செய்வது என்பது பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி மீண்டவர்கள் மனநலப்பாதிப்பிற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்குனர் பூங்கொடி மற்றும் மருத்துவக்கல்லூரி துறை தலைவர்கள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story