வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றம்


வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 18 Dec 2020 8:53 PM IST (Updated: 18 Dec 2020 8:53 PM IST)
t-max-icont-min-icon

வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி,

நிவர் மற்றும் புரெவி புயல்களால் செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சங்கராபரணி ஆறு, தொண்டியாற்றில் இருந்து வெள்ளநீர் வீடூர் அணைக்கு வந்ததால், அதன் முழு நீர்மட்ட கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 5-ந் தேதி முதல் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வீடூர் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று அதிகாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையின் நீர்வரத்தை கணக்கிட்டு உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்தனர்.

அதன்படி அணைக்கு வரக்கூடிய 1,500 கனஅடி நீர்வரத்தை அப்படியே அணையின் 8 ஷட்டர்களின் வழியாக உபரிநீராக வெளியேற்றி வருகின்றனர். மேலும் நீர்வரத்து நிலவரங்கள் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன், அணை பாதுகாப்பு உதவி பொறியாளர்கள் அய்யப்பன், கார்த்திக், செல்வி மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வீடூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிற நீர்வரத்தை வினாடிக்கு 1,500 கனஅடி உபரிநீராக சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story