கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை - அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 16 செ.மீ. பதிவு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை - அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 16 செ.மீ. பதிவு
x
தினத்தந்தி 18 Dec 2020 9:04 PM IST (Updated: 18 Dec 2020 9:04 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 16 செ.மீ.பதிவானது.

கள்ளக்குறிச்சி,

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினமும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.

கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் கோமுகிஅணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி உபரி நீர் ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. புத்தந்தூர் கிராமம் வழியாக ஆலத்தூர் ஏரிக்கு செல்லும் ஓடையின் கரைகள் உடைந்ததால் கிராமத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

பலத்த மழை காரணமாக மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர் ஏரி நிரம்பி கரைகள் உடையும் அபாய நிலை ஏற்பட்டது. இதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண் ஏற்றி வந்து கரையை பலப்படுத்தினார்கள். இதை வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜயபிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பொழிந்த கன மழையால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள குளம், குட்டை மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சில ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தரைப்பாலம் மூழ்கியது. இதையறிந்து பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தரைப்பாலம் உள்ள பகுதியை ஆய்வு செய்து அங்கு உடனடியாக போக்குவரத்து தடையை ஏற்படுத்தி புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வழியாக போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

தொடர் மழையால் அரகண்டநல்லூர்-விழுப்புரம் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகே சுமார் 4 அடி உயரத்திற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். இதை விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காகவும், வேறு அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் அரகண்டநல்லூர் மற்றும் கீழையூர் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர மடம்பூண்டி, வெங்கூர், மணலூர்பேட்டை, திருப்பாலப்பந்தல், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் 13 இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 164 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக கச்சிராயபாளையத்தில் 24 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. சராசரியாக 100.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருப்பாலப்பந்தல்............133

வெங்கூர்..........................129

மணம்பூண்டி...................128

மணலூர்பேட்டை...........127

உளுந்தூர்பேட்டை..........122

தியாகதுருகம்...................120

சூளாங்குறிச்சி ..................114

விருகாவூர்.........................110

கடவானூர்.......................110

ரிஷிவந்தியம்.....................107

கீழ்பாடி............................107

எறையூர்.............................95

அரியலூர் .........................95

களையநல்லூர்...................95

சங்கராபுரம்.......................78

மூங்கில்துறைப்பட்டு.........60

மூரார்பாளையம்...............47

பிள்ளையார்குப்பம்......43.50

Next Story