மயிலம் அருகே, கீழ்பேரடிக்குப்பம் ஏரி உடைப்பு; 155 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம்


மயிலம் அருகே, கீழ்பேரடிக்குப்பம் ஏரி உடைப்பு; 155 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம்
x

மயிலம் அருகே கீழ்பேரடிக்குப்பம் ஏரி உடைந்ததால் 155 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. திடீரென வெள்ளத்தை கண்டு கிராம மக்கள் அலறி அடித்துக்கொண்டு மேடான இடத்திற்கு சென்றனர்.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கீழ்பேரடிக்குப்பம் கிராமத்தில் 125 குடும்பத்தினரும், புதுகாலனியில் 30 குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். விவசாயிகளான இவர்கள், அங்குள்ள 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை நம்பி பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஏரி மூலம் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் மழை பெய்து, ஏரி 75 சதவீதம் நிரம்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கிராமத்தை சுற்றிலும் கன மழை பெய்தது. இதனால் ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. ஏரி நிரம்பி, அங்கிருந்து உபரி நீர் வெளியேறியது. நேற்று காலை 8 மணி அளவில் பாசனத்திற்காக திறக்கப்படும் மதகும், ஏரிக்கரையும் திடீரென உடைந்தது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வெள்ளம்போல் விளைநிலத்திற்குள் புகுந்து, அங்கு சாகுபடி செய்திருந்த நெல், உளுந்து, வரகு உள்ளிட்ட பயிர்களை அடித்துச்சென்றது. பின்னர் அந்த தண்ணீர் புதுகாலனியில் உள்ள 30 வீடுகளுக்குள்ளும், கீழ்பேரடிக்குப்பத்தில் உள்ள 125 வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

இதை கண்ட கிராம மக்கள் வீட்டைவிட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி, மேடான இடத்தில் தஞ்சமடைந்தனர். மேலும் சிலர் வீட்டின் மேல் பகுதியில் ஏறி அமர்ந்திருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் தாசில்தார் செல்வம் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட அனைவரையும் கீழ்எடையாளம் உயர்நிலைப்பள்ளியில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், மயிலம் போலீசார் விரைந்து சென்று கிராமத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தவர்களை மீட்டு கொண்டு வந்தனர்.

மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு நேரில் சென்று பாதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கிராமங்களுக்குள் புகுந்த தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Next Story