தியாகதுருகத்தில் தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
தியாகதுருகத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி லலிதா(வயது 38). இவர் அந்த பகுதியில் பெண்கள் அழகுக் கலை கடை நடத்தி வந்தார். இவரது மகள் தர்ஷினி(18) புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மயக்கவியல் மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் பாலமுருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதையடுத்து லலிதா அவரது மகளுடன் தனது தந்தை மண்ணாங்கட்டியுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மண்ணாங்கட்டி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். வீட்டில் லலிதா அவரது மகளுடன் இருந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மண்ணாங்கட்டி, வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பலமுறை சத்தம் எழுப்பியும் கதவு திறக்கப்படாததால் ஏதோ விபரீதம் நிகழ்ந்து இருப்பதை அறிந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது லலிதாவும், தர்ஷினியும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
உடனே அவர்கள் இருவரையும் தூக்கில் இருந்து கீழே இறக்கி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய், மகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தனக்கு ஆதரவாக இருந்த மகள், பேத்தியின் உடல்களை பார்த்து மண்ணாங்கட்டி கதறி அழுதார். பின்னர் தாய்-மகள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி பிண அறையில் வைக்கப்பட்டன.
பாலமுருகன் இறந்த பின்னர் மனமுடைந்து காணப்பட்ட லலிதாவுக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் லலிதா தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. என்றாலும் அவர்களின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தியாகதுருகத்தில் தாய், மகள் இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story