வல்லுநர் குழு ஒப்புதல் பெற்று நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்படும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்


வல்லுநர் குழு ஒப்புதல் பெற்று நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்படும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2020 10:06 PM IST (Updated: 18 Dec 2020 10:06 PM IST)
t-max-icont-min-icon

வல்லுநர் குழு ஒப்புதல் பெற்று நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர்,

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதத்தையொட்டி ஆருத்ரா தரிசன விழா, வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், 23-ந் தேதி (புதன்கிழமை) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 24-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 25-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், தெருவடைச்சானிலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

முக்கிய விழாவான தேர்த்திருவிழா 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தேர் மற்றும் தரிசன விழா நாட்களில் சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவிலுக்கு வரும் பொதுமக்களிடையே எவ்வாறு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் தரிசன விழாவை மேற்கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெற்று, அதனடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். அபிஷேகத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து, ஸ்தல ஆய்வு செய்து அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, சப்-கலெக்டர் மதுபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், அரசு வக்கீல் சந்திரசேகர், சிதம்பரம் தாசில்தார் ஆனந்த் மற்றும் தீட்சிதர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story