தேனியில், போலீசாரின் சீருடையில் பொருத்த நவீன கேமரா - மாவட்ட சூப்பிரண்டு வழங்கினார்
தேனியில் போலீசாரின் சீருடையில் பொருத்த நவீன கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கும், சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் சீருடையில் பொருத்தும் கேமராக்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சுவாச பகுப்பாய்வு கருவி, இரவு ரோந்து பணியின் போது தோள்பட்டையில் பொருத்தக்கூடிய ஒளிரும் விளக்குகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 'மெகாபோன்' எனப்படும் ஒலிபெருக்கி போன்றவை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
இதில் 20 போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார். மேலும், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் 5 சுவாச பகுப்பாய்வு கருவிகள், 10 ஒலிபெருக்கிகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். அத்துடன் 102 போலீசாரின் சீருடையின் தோள்பட்டை பகுதியில் பொருத்த ஒளிரும் விளக்குகளையும் அவர் வழங்கினார்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறுகையில், "குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், வாகன தணிக்கையின் போது பணியை செய்ய விடாமல் தடுத்து யாரேனும் தகராறு செய்தாலோ, வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ அவற்றை வீடியோ பதிவு செய்யும் வகையில் இந்த கேமராக்கள் வழங்கப்பட்டது. இந்த நவீன கேமராக்களில் 9 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யலாம். போலீசார் பணியின் போது கேமராவை இயங்கும் நிலையில் வைத்து இருக்க வேண்டும். அன்றாடம் பதிவாகும் வீடியோக்களை போலீஸ் நிலையத்தில் உள்ள கணினியில் சேமித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், சங்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story