பெங்களூருவில் போலீஸ் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குழந்தை இல்லாததால் விபரீத முடிவு


பெங்களூருவில் போலீஸ் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை குழந்தை இல்லாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 19 Dec 2020 5:00 AM IST (Updated: 19 Dec 2020 3:25 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குழந்தை இல்லாததால் போலீஸ் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஷீலா. இவர்கள் 2 பேரும் போலீஸ் ஆவார்கள். பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள சம்பிகேஹள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தாளராக சுரேஷ் பணியாற்றி வந்தார். இதுபோல பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஷீலா பணியாற்றினார். இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. ஆனால் குழந்தை இல்லை என்று தெரிகிறது. இதற்காக 2 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுரேசும், ஷீலாவும் மனவருத்தத்தில் இருந்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பிகேஹள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீசாரின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுரேசும் கலந்து கொண்டார். பின்னர் கூட்டம் முடிந்ததும் இரவு 11 மணியளவில் சக போலீஸ்காரர்களுடன் பேசிவிட்டு சுரேஷ் வீட்டிற்கு சென்றார். அதுபோல ஷீலாவும் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி ஆனபோதிலும் சுரேசின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சுரேசின் வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது சுரேசும், ஷீலாவும் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கொத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொத்தனூர் போலீசார் சுரேசின் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிய சுரேஷ், ஷீலாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனபோதிலும் குழந்தை இல்லாத காரணத்தால் சுரேசும், ஷீலாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஆனாலும் தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சி.ஐ.டி. பிரிவு பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு லட்சுமி, மர்மமான முறையில் இறந்தார். இந்த சுவடு மறைவதற்குள் போலீஸ் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சக போலீசாரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story