பாபநாசம்-சேர்வலாறு அணைகளில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை


பாபநாசம்-சேர்வலாறு அணைகளில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை
x

பாபநாசம்-சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சில அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

அதன்படி, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 142.40 அடியை எட்டியது. தொடர்ந்து அணை முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி 2 ‌‌ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. பின்னர் உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 3,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதேபோன்று 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டமும் நேற்று காலையில் 148.95 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அந்த அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது அகஸ்தியர் அருவிக்கு மேல் பகுதியில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாபநாசம் படித்துறையில் சுவாமி மண்டபம், விநாயகர் கோவில் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் விக்கிரமசிங்கபுரம் நகரசபை சார்பில், ஆற்றங்கரையிலும், தாழ்வான இடங்களிலும் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் வீதி வீதியாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பாபநாசம் சோதனைச்சாவடி மூடப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உற்சவர் மற்றும் பூஜை பொருட்களை மேல கோவிலுக்கு எடுத்து வந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அம்பை, விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. ராமநதி, கடனாநதி அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் வி‌‌ஷ்ணு நேற்று பாபநாசம் அணைக்கும், அகஸ்தியர் அருவிக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியதையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது வினாடிக்கு 4,680 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 1,500 கன அடி தண்ணீர் சேர்வலாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இதேபோன்று கடனாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அந்த அணையில் இருந்து வினாடிக்கு 950 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது வெள்ள அபாயம் இல்லை. அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து, நீர்வரத்து அதிகரித்தால், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க உதவி கலெக்டர், தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 40 சதவீத குளங்கள் நிரம்பியுள்ளன. கால்வாய்களில் அடைப்பு ஏற்படாதவாறு தூர்வாரி பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகள் சற்று மோசமாக உள்ளது. மழைக்காலம் முடிந்ததும் சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-35, சேர்வலாறு-16, மணிமுத்தாறு-10, பாளையங்கோட்டை-6, தென்காசி-8, சங்கரன்கோவில்-6, செங்கோட்டை-5, சிவகிரி-4, குண்டாறு-9, கன்னடியன்-7.8, களக்காடு-5, அம்பை-9, நெல்லை-3, அடவிநயினார்-5, ராமநதி-15, நாங்குநேரி-9, ராதாபுரம்-2, கடனாநதி-14, சேரன்மாதேவி-2, நம்பியாறு-6, கொடுமுடியாறு-10, ஆய்க்குடி-5.

Next Story